Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

தமிழ் விளக்கம்
ந.சி. கந்தையா



தமிழ் விளக்கம்


1. தமிழ் விளக்கம்
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. தமிழ் விளக்கம்


தமிழ் விளக்கம்

 

ந.சி. கந்தையா


நூற்குறிப்பு
  நூற்பெயர் : தமிழ் விளக்கம்
  ஆசிரியர் : ந.சி. கந்தையா
  பதிப்பாளர் : இ. இனியன்
  முதல் பதிப்பு : 2003
  தாள் : 16.0 கி. மேப்லித்தோ
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 20 + 164 = 184
  படிகள் : 2000
  விலை : உரு. 80
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  2, சிங்காரவேலர் தெரு,
  தியாகராயர் நகர், சென்னை - 17.
  அட்டை வடிவமைப்பு : பிரேம்
  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
  20 அஜீஸ் முல்க் 5வது தெரு
  ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
  கட்டமைப்பு : இயல்பு
  வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
  328/10 திவான்சாகிப் தோட்டம்,
  டி.டி.கே. சாலை,

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)


தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.

‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’

என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.

அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.

இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.

பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.

தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.

திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-

திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.

பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.

“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”

வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.

அன்பன்

கோ. தேவராசன்

அகம் நுதலுதல்


உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.

உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.

தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.

தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.

எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.

இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.

எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.

வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.

உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.

இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.

சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.

அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.

உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.

நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.

அன்பன்

புலவர் த. ஆறுமுகன்

நூலறிமுகவுரை


திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.

இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.

திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.

இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.

ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:

சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்

58, 37ஆவது ஒழுங்கை,

கார்த்திகேசு சிவத்தம்பி

வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்

கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.

கருவிநூல் தந்த ந.சி. கந்தையா


தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.

தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.

தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.

உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.

மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.

நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.

தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

பேரா. கு. அரசேந்திரன்

பதிப்புரை


வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.

இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.

ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.

தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.

தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.

தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.

நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.

வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.

ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?

தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.

மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.

இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதிப்பகத்தார்

தமிழ் விளக்கம்


கேள்வி - மறுமொழி
தமிழ் விளக்கம்

வினா: தமிழ் எவ்வளவு பழமையுடையது?
விடை: காலம் குறிப்பிட முடியாத பழமையுடையது.

வினா: தமிழ் தோன்றிய இடம் எது?
விடை: தென்னிந்தியாவிலும் அதன் தெற்கே கிடந்த கடலுள் மறைந்து போன நாட்டிலும்.

வினா: “சதுமறை ஆரியம் வருமுன் சகமுழு நினதாயின். முதுமொழி நீயனாதியென மொழிகுவதும் வியப்பாமே” என்னும் மனோன் மணியப் பாடல் உண்மையாகுமா?
விடை: உலகின் பழைய மொழிகள் எல்லாவற்றுக்கும் தொடர்பு காணப் படுகின்றது. அம்மொழிகள் ஒரு அடிமரத்தினின்றும் பிரிந்த கிளைகள் போல்வன. பழைய மொழிகளுக்கெல்லாம் அடிப் படையில் தமிழ் இருப்பதை ஆராய்ச்சியாளர் காட்டியுள்ளார்கள். அக் கருத்துகளைத் தெள்ளிதில் அறிந்த பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் “சது மறை ஆரியம் வருமுன் சகமுழுது நினது” என அழகாகக் கூறி யுள்ளார்.

வினா: பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் மனோன்மணியத்தில் கூறிய கருத்தை வலியுறுத்தும் சான்றுகள் உள்ளனவா?
விடை: சிந்துவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட அரப்பா மொகஞ்சதரோ என்னும் பழைய நகரங்களில் ஒருவகைச் சுண்ணாம்புக் கல்லில் வெட்டப்பட்ட முத்திரைகள் பல கிடைத்தன. அவைகளில் அந் நகரங்களில் 5500 ஆண்டுகளின் முன் வழங்கிய மொழியின் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதே வகை எழுத்துக்கள் பசிபிக் கடலில் தென்னமெரிக் காவுக்கு அண்மையிலுள்ள ஈஸ்டர் தீவுகளில் காணப்பட்டன. சின்ன ஆசியா, சுமேரியா, பாபிலோன், எல்லம், கிரேத்தா, எகிப்து, பினீசியா, அராபியா முதலிய நாடு களில் வழங்கிய எழுத்துக்களுக்கும் சிந்துவெளி எழுத்துக்களுக் கும் ஒற்றுமை காணப்படுகின்றது. சுமேரிய, எகிப்திய, அக்கேடிய மொழிகளில் பல தமிழ்ச் சொற்களும் மூலங்களும் காணப்படு கின்றன. பேராசிரியர் லாங்டன், மேற்கூறிய சின்ன ஆசிய, மேற்கு ஆசிய, சிந்துவெளி, எகிப்திய, கிரேத்தா எழுத்துக்கள் ஒரே அடிப் படையினின்று தோன்றின என்றும், பேராசிரியர் - பிராங்போர்ட், சிந்து வெளி நாகரிகம் சுமேரிய, எகிப்திய நாகரிங்களுக்கு முற்பட்டது என்றும் கூறியுள்ளார்கள். மொகஞ்சதரோவிற் காணப்பட்ட எழுத்துக்களை ஒத்தவை, திருநெல் வேலி ஹைதரபாத்துச் சமாதிகளிற் கிடைத்த மட்பாண்டங்களிலும், இலங்கையில் கேகாலை என்னும் இடத்திலும் காணப்பட்டன. சிந்துவெளி நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டதென்றும், ஆரியர் வருகைக்கு முன் அங்கு திராவிடர் வாழ்த்திருந்தார்கள் என்றும் ஆராய்ச்சி வல்ல பந்தர்க்கர், எஸ்.கே. சட்டர்ஜி போன்றார் கூறியுள்ளனர். இவை போன்ற பல காரணங்களால் “சதுமறை ஆரியம் வருமுன் சகமுழுதும்” தமிழ் என்னும் கருத்து வலியுறுகின்றது.

வினா: மொகஞ்சதரோ அரப்பா எழுத்துக்கள் தமிழ் என்று எப்படித் துணியலாம்?
விடை: அரப்பா மொகஞ்சதரோ எழுத்துக்களை ஹெரஸ் என்னும் ஸ்பானியர் ஒருவர் ஒலிமுறையாக வாசித்தார். அவ்வாசிப்பில் காணப்படும் சொற்கள் பல இன்றும் தமிழிலும் அதன் கிளை மொழிகளிலும் வழங்கும் சொற்களாகக் காணப்படுகின்றன. கிளிமென்ட், ஸ்கோனர் என்னும் செர்மானியர், மத்திய ஐரோப்பா வில் ஆரிய மொழி பரவுவதன் முன் தமிழ் வழங்கிற்று என்றும், அங்குள்ள பழைய இடப் பெயர்கள் ஆற்றுப்பெயர்கள் தமிழா யிருக்கின்றன வென்றும் காட்டியுள்ளார். சுமேரிய மொழியில் தமிழ்ச் சொற்கள் பல இருப்பதையும் அவர் குறிப்பிட் டுள்ளார். சுமேரியர் சிந்துவெளியிலும் தென்னிந்தியாவிலுமிருந்து தைகிரஸ் யூபிராதஸ் ஆற்றோரங்களிற் சென்று குடியேறியவர்களாவர். இதனால் பழைய நாகரிக உலகில் வழங்கிய மொழிகள் தமிழ் அடிப்படை யைப் பெற்றிருந்தன என்னும் உண்மை தெளிவடை கின்றது.

வினா: தமிழர்களோடு உறவுடையராய்ப் பிறநாடுகளில் வாழ்ந்த மக்கள் எவ்வெவர்?
விடை: எல்லம் மக்கள், சாலதியர், அக்கேடியர், இலைசியர், கிரேத்தியர், பினீசியர், பிரித்தானியர், பழைய அமெரிக்கர், ஸ்பெயின் நாட்டுப் பழங்குடிகளாகிய பாஸ்க்குகள், எற்றூஸ்கானியர் என்னும் இத்தாலி நாட்டுப் பழங்குடிகள் என்போர்.

வினா: எல்லம் என்னும் நாடு எங்குள்ளது? எல்லம் மக்கள் எங்கு நின்றும் வந்து எல்லம் நாட்டை அடைந்தார்கள்.
விடை: தைகிரஸ் யூபிராதஸ் முகத்துவாரத்துக்கு மேலே மேற்கில் எல்லம் உள்ளது. இதன் தலைநகர் சூசா. இவர்கள் இன்று இலங்கை அல்லது ஈழம் என வழங்கும் பழைய எல்லம் நாட்டினின்றும் சென்றார்கள். இவர்கள் தாம் சென்று குடியேறிய நாட்டுக்கு எல்லம் என்று பெயரிட்டனர். எல்லம் மக்கள் புதிதாக அந் நாட்டுக்குச் சென்று குடியேறிவர்களாவர். இந்திய நாட்டினின்றும் சென்ற திராவிட மக்களே தமது அடையாளத்தை அங்கு விட்டுச் சென்றனர் என டாக்டர் ஹால் கூறியுள்ளார்.

வினா: ஆப்பிரிக்காவிலே நீல நதிக்கரைகளிற் குடியேறி எகிப்தியர் என நாகரிகம் படைத்து விளங்கிய மக்கள் யார்?
விடை: எகிப்தியர்தாம் பண்டு நாட்டினின்றும் நீல நதிக்கரையை அடைந் தார்கள் என நம்பி வந்தார்கள். பண்டு நாடு என்பது மலையாளக் கரை எனத் துணியப்படுகின்றது. பண்டு நாட்டினின்றும் எகிப்தியர் வாங்கிச் சென்ற பண்டங்கள் அவர்கள் நூல்களில் காணப்படுகின்றன. அவை தென்னிந்தியாவிலேயே கிடைப்பது. இதனால் பண்டு தென் னிந்தியாவென ஹிரன், டாக்டர் ஹால் போன்ற வரலாற்றிஞர் பலரால் துணியப்பட்டுள்ளது.

வினா: சுமேரியர் எங்கிருந்து சென்று தைகிரஸ் யூபிராதஸ் ஆற்றோரங் களை அடைந்தார்கள்?
விடை: சுமேரியர் தென்னிந்தியாவிலும், சிந்துவெளிகளின்றும் கடல் வழி யாகவும் தரை வழியாகவும் சென்றார்கள். சுமேரிய மொழி திராவிட மொழிகளைப் போல ஒட்டுச் சொற்களையுடையது. சுமேரியாவின் தலைநகராகிய, இலகாசிலும், ஊர் முதலிய யிடங் களிலும், சிந்து வெளியிற் கிடைத்தவை போன்ற முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகளுட் பல சிந்துவெளி முத்திரை களை ஒத்துள்ளன. அங்கு காணப்பட்ட கல்லிற் செதுக்கப்பட்ட மக்கள் வடிவங்கள், திராவிட மக்களின் தோற்றத்தை ஒத்தன. டாக்டர் ஹால் என்பார் சிறிதும் ஐயமின்றிப் பழைய சுமேரியர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்களாகவர் எனப் புகன்றுள்ளார். இந்தியாவில் ஆரிய ஆட்சி என்னும் நூல் எழுதிய ஹாவேல் என்பாரும் சுமேரியர் தென்னிந்தியாவினின்றும் சென்ற திராவிடர்கள் எனக் கூறியுள்ளார்.

வினா: சாலதியர் என்போர் யார்?
விடை: இவர்கள் சோழ தேசத்தினின்றும் சென்று தைகிரஸ் யூபிராதஸ் ஆறுகளின் மேற்கு ஓரத்தில் குடியேறியவர்களாவர். இவர்கள் தாம் சென்று குடியேறிய நாட்டுக்குச் சோழதேசம் எனப் பெயரிட்ட னர். சோழ தேசம் என்பதே சாலதியர் எனத் திரிந்து வழங்கிற்று. இவ்வாறு இருக்கு வேத இந்தியா என்னும் நூலில் அபினஸ் சந்திரதாஸ் என்னும் ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்.

வினா: பாலஸ்தீனரும் அராபியரும் திராவிடரா?
விடை: ஊர்ப்பட்டினத்தினின்றும் சென்ற ஆபிரகாமின் சந்ததி யினரே அராபியரும் எபிரேயரும் எனப்படுகின்றனர். ஊர்ப்பட்டினத்தில் வாழ்ந்தோர் சாலதியராவர். கிறித்துவ வேதத்தின் பழைய ஏற் பாட்டைப் படிக்கும்போது எபிரேய மக்களின் பழக்கவழக்கங்கள் இன்றையத் திராவிட மக்களிடையே காணப்படுவன போன்றவை எனத் தெள்ளிதில் புலப்படுகின்றது. ஆராய்ச்சிவல்ல ஆர்.எஸ். வைத் தியநாத ஜயர், அவர்கள் பாலஸ்தீனர் தென்னிந்தியாவினின்றும் சென்று குடியேறிய திராவிடரென நன்கு விளக்கியுள்ளார்.1

வினா: கிரேத்தா மக்கள் தமிழர் என்பதற்கு ஆதாரமுண்டா?
விடை: கிரேத்தா வென்பது கிரீஸ் நாட்டுக்குத் தெற்கேயுள்ள தீவு. இங்கு வாழ்ந்த மக்கள் தமிலி என அழைக்கப்பட்டார்கள் என எரதோ தஸ் (Heradotus, கி.மு. 480) என்னும் ஆசிரியர் கூறியுள்ளார். அவர் களின் பழைய நாகரிகம் அரப்பா மொகஞ்சதரோ நாகரிகத்தை ஒத்தது.

வினா: இலைசிய மக்கள் தமிழர் என்பதற்கு ஆதாரமுண்டா?
விடை: இலைசியா சின்ன ஆசியாவில் உள்ளது. இவர்களும் தமிழர் என அழைக்கப்பட்டார்கள் என்பது அந்நாட்டுக் கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது.

வினா:பினீசியர் தமிழர் என்பதற்குச் சான்று உண்டா?
விடை: வேதகாலத்தில் பாணீஸ் என்னும் ஒரு குழுவினர் வட நாட்டில் காணப்பட்டார்கள். பாணீஸ் எனப்பட்டோர் தென்னாட்டி னின்று சென்ற வணிகர் என்றும், வணிகர் என்பதே பாணீஸ் எனத் தமிழ் அறியாத வடநாட்டு மக்களால் உச்சரிக்கப்பட்டதென்றும் ஆராய்ச்சியாளர் முடிவு செய்துள்ளார்கள். இவர்கள் முற்காலத் தில் பரதர் எனவும் பட்டார்கள். இவர்கள் மத்தியத்தரைக் கடலோரத்தில் பாலஸ்தீனத்துக்கு வடக்கே குறியேறினார்கள். அவர்கள் தமது நாட்டைப் பனைநாடு என வழங்கினர். பனை நாடு பினீசீயா எனத் திரிந்தது. பினீசியரின் எழுத்துக்கள் பிராமி எழுத்துக்களை ஒத்தவை. பிராமி எழுத்து மொகஞ்சதரோ எழுத்தின் திரிபு. பாணீஸ் என்போர் பாணர் எனச் சிலர் கருதினார்கள். அது ஏற்றதன்று.

வினா: பாஸ்க்கு என்னும் ஸ்பெயின் நாட்டு மக்கள் எவ்வாறு தமிழராவர்?
விடை: பாஸ்க்கு மொழி திராவிட மொழியோடு மிக ஒற்றுமை யுடையது. பாஸ்க்கு மக்கள் தோற்றத்திலும், பழக்க வழக்கங்களிலும் திராவிட மக்களை ஒத்தவர்களாவர். இவ்வாறு மொழி நூலாரும் குல நூலாரும் துணிந்துள்ளார்கள்.

வினா: எற்றூஸ்கானியர் என்னும் இத்தாலிய மக்கள் எவ்வாறு திராவிட இனத்தைச் சேர்ந்தவர்களாவர்?
விடை : இவர்கள் நாகரிகத்தாலும், வழிபாட்டாலும், மொழி யாலும் தமிழரை ஒத்தவர்களாவர்.

வினா: பழைய அமெரிக்கர் எவ்வாறு தமிழராவர்?
விடை: 1பழைய மாயா நாகரிகம் தென்னிந்திய நாகரிகத்தை ஒத்தது. பழைய அமெரிக்க மொழி தமிழ் போன்று ஒட்டுச் சொற்களுடையது. அவர்கள் உறவின் முறையாரை அழைக்கும் முறை முதலிய வைகளால் அவர்கள் ஒருகாலத்தில் தமிழரினின்றும் பிரிந்து சென்றவர்கள் என ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

வினா: இன்று இந்திய நாட்டில் பலமொழிகள் வழங்குகின்றன. முற்காலத்தில் இம்மொழிகள் எல்லாம் இருந்தனவா?
விடை: 3000 அல்லது 3500 ஆண்டுகளுக்கு முன் இமயமலை முதல் கன்னியா குமரி வரையும் தமிழ் என்னும் ஒரு மொழியே வழங்கிற்று.

வினா: எப்பொழுது புதிய மொழிகள் எழுந்தன?
விடை: ஆரியர் என்னும் புதிய மக்கள் இந்திய நாட்டிற்கு வந்தபோதும், கிரேக்கர், சித்தியர், மங்கோலியர் முதலிய மக்கள் இந்தியாவிற் குடியேறிய போதும், புதிதாக வந்த ஆரியர் தமிழல்லாத மொழியை பேசினார்கள். அவர்கள் தமிழரோடு அளவளாவ நேர்ந்த போது தமிழ்ச் சொற்களைக் கொச்சையாக உச்சரித்தார்கள் (பறங்கியர் வெள்ளையர் தமிழ் பேசுவதுபோல), அவர்களோடு அளவளாவ நேர்ந்த தமிழரும் ஆரிய மொழிச் சொற்களைக் கொச்சையாக வழங்கினர். இவ்வாறு இரு மொழிகளும் கலந்து வடக்கே பல மொழிகள் தோன்றின.

வினா: சமக்கிருதமே தமிழுக்கு முற்பட்ட மொழி என்றும், சமக்கிருத்தி னின்றே தமிழ் பிறந்ததென்றும் வடமொழிப் புலவர்கள் கூறுகின் றார்கள். இது உண்மையாகுமா?
விடை : வரலாறும், மொழி ஆராய்ச்சியும் தலையெடுக்காத ஒரு காலத்தில் இந்நம்பிக்கையே இருந்துவந்தது. இது முற்கால மக்கள் பூமி வண்டிச்சக்கரம் போன்ற வட்டமாய்த் தட்டையாயுள்ளதென் றும், அதனை யானைகளோ பாம்போ எப்பொழுதும் சுமக் கின்றன வென்றும் நம்பியது போன்ற மூட நம்பிக்கை. இன்று பூமி சாத்திர அறிவு தலையெடுத்தபோது முற்கால மக்களின் நம்பிக்கை நகைக்கத் தக்கதாகின்றது. இதனை ஒத்ததே வடமொழியிலிருந்து தமிழ் பிறந்ததெனக் கூறுவதுமாகும்.

வினா: தமிழ் ஆரியத்திடம் எழுத்துக்களை இரவல் பெற்றது என்கி றார்கள். அது உண்மையா?
விடை: ஆரியர் இந்திய நாட்டுக்கு வருவதன் முன் தமிழர் எழுத்தெழுதும் முறையை நன்கு அறிந்திருந்தார்கள் என்பது அரப்பா, மொகஞ்ச தரோப் புதைபொருள் ஆராய்ச்சிகளால் நன்கு உறுதிப்படு கின்றது. ஆரியர் நெடுங்காலம் எழுத்தெழுதும் முறையை அறியா திருந்தார்கள். ஆகவே அவர்களின் பழைய பாடல்கள் நெட்டுருச் செய்து காப்பாற்றப்பட்டன. அதனால் அப் பாடல்கள் கேட்கப் படுவது, நினைக்கப்படுவது என்னும் பொருளில் சுருதி, ஸ்மிருதி என்னும் பெயர்களைப் பெற்றன. அவர்கள் தமிழர்களோடு அளவளாவிய போது தமிழ் அறிஞர் அவர்களுக்கு எழுத்தெழுதும் முறையைக் கற்றுக் கொடுத்தார்கள். அப்போது அவர்களின் எழுதாக் கிளவிகள், எழுத்துக் கிளவிகளாயின.

வினா: தமிழுக்கு இலக்கணத்தைச் செய்து உதவினவர்கள் ஆரியர்களே எனச் சிலர் கூறுகின்றனர். அது உண்மையாகுமா?
விடை: ஆரியர் இந்திய நாட்டுக்கு வரும்பொழுது தமிழ் மிகத் திருத்தம் அடைந்திருந்தது, எழுத்தெழுத அரியாதிருந்த ஆரியர், தமிழுக்கு இலக்கணம் செய்து கொடுத்தார்கள் என்பதை பிறவிக் குருடன் பார்வை யுடைய ஒருவனுக்கு வழிகாட்டினான் என்பது போலாகும். ஆரியரின் வேதபாடல்களில் தமிழ்ச் சொற்கள் பல உள்ளன. அப் பாடல்களைச் செய்தவர்கள் பலர் தமிழர் எனக் கருதுப்படுகின் றனர். 1ஆரியருக்கு நூல் செய்து அவர் மொழியை வளப்படுத்திய அபஸ்தம்பர், சாணக்கியர், சங்கராச்சாரியர் போன்றவர்கள் தமிழரே யாவர். ஒருகாலத்தில் மக்கள் சூரியன் பூமியைச் சுற்றி வருகின்ற தென்றும், பூமி ஓரிடத்தில் நிற்கின்ற தென்றும் நம்பி வந்தார்கள். இவ்வகை நம்பிக்கையே தமிழுக்கு ஆரியர் இலக்கணம் செய்தார் என்னும் கதையுமாகும்.

வினா: சமக்கிருதம் என்பதன் பொருள் யாது?
விடை: சமக்கிருதம் என்பதற்கு நன்றாகச் செய்யப்பட்டது என்பது பொருள். தமிழில் வழங்கும் சேரி மொழியைப் போலவே அது முன்பு இருந்தது. பின்பு திருத்தஞ்செய்யப்பட்டுச் சமக்கிருதம் என்னும் பெயரைப் பெற்றது.

வினா: சமக்கிருதம் மக்களால் பேசப்பட்டதா?
விடை: சமக்கிருதம் ஒருபோதும் பேசப்படவில்லை. அது இலக்கிய மொழியாகவே இருந்து வந்தது.

வினா: அது எப்படி இலக்கிய மொழி ஆயிற்று?
விடை: இந்திய நாட்டை அடைந்த ஆரியர் ஒரு கூட்டத்தினரல்லர். பல கூட்டத்தினர், அவர்கள் பேசிய மொழியில் வேறுபாடுகள் இருந் தன. அக்கூட்டத்தினரின் ஒரு பகுதியினர் வழங்கிய மொழியில் செய்யப்பட்ட அவர்களின் பழைய பாடல்கள் சமய சம்பந்தம் பெற்றிருந்தன. ஆகவே சமயத்தின் பொருட்டு இவை ஒரு கூட்டத் தினரால் மனப்பாடஞ் செய்து காப்பாற்றப்பட்டு வந்தன. காலத் தில் அம்மொழி ஒரு கூட்டத்தாரின் சாதிமொழி ஆயிற்று. பிற் காலங்களில் அம்மொழி தெய்வ மொழி என்னும் நம்பிக்கையும் எழுந்தது. அம்மொழியில் வித்துவான்கள் நூல் இயற்ற லானார்கள். ஆனால் மக்கள் அம்மொழியைப் பேசவில்லை. வித்துவக் கூட்டங் களுக்கிடையும் ஒரு சாதியாரிடையுமே அம்மொழி வழங்குவ தாயிற்று.

வினா: வடமொழி தென்னாட்டுக்கு எவ்வாறு வந்தது,
விடை: புத்த சைன மதத்தவர்களாலும் வடநாட்டுப் பிராமணராலும் கொண்டுவரப்பட்டது.

வினா: தென்னாட்டில் அது எவ்வாறு சமய மொழியாயிற்று?
விடை: ஐரோப்பிய நாட்டுக் கிறித்துவப் பாதிரிமார் இந்திய நாட்டில் தமது மதத்தைப் பரப்பியது போல், முற்காலத்தில் வட நாட்டினின்றும் வந்த ஆரியப் பிராமணர் அரசரைத் தம் மதத்துக்கு திருப்பினர். அதனால் அவர்கள் அரச வட்டங்களில் செல்வாக்கடைந்து அரருக்கு ஆசிரியர்கள் அமைச்சர்களாகவும் இருந்தனர். இவ்வாறு அதிகாரம் அடைந்த பிராமணர், கோயில்களை மேற்பார்ப்பவர் களாகிய பார்ப்பனரிடையே திருமணக் கலப்புடையராயினர். அப் பொழுது பார்ப்பனரும் பிராமண மதத்தைத் தழுவினர். அவர்கள் தமது பார்ப்பனத் தொழிலை விட விரும்பவில்லை. தம்மை ஆரியர் எனக் கூறினார்கள்; சமக்கிருதமே தமது தாய் மொழி என்றார்கள்; அரசரின் உதவியைப் பெற்றுச் சமக்கிருதத்தைச் சமய மொழியாக்கினார்கள். இதனைப் பொதுமக்கள் எதிர்த்து வந்தார்கள். அரச ஆணைக்கு எதிராக இம்முயற்சி பயனடைய வில்லை முற்கால அரசர் பிராமணரிடத்தில் அளவு கடந்த மூடபக்தி வைத்திருந்தார்கள். பழைய கல்வெட்டுக்களில் அவர் களுக்கு வழங்கப்பட்ட தானங்கள், நிலங்கள், கிராமங்களைப் (பிரமதாயங்கள்) பற்றி நாம் காணலாம் அவர்களுக்கு தானங் கொடுக்கப்பட்ட நிலங்களுக்கு வரி நீக்கப்பட்டிருந்தது. அவர்கள் போர்களுக்குச் செல்வதில்லை. அவர்களின் அதிகாரம் அரச அதிகாரத்தையும் மிஞ்சியிருந்தது. இவ்வகை மூடக்கொள்கை மலிந்த காலத்தில் பிராமணர் முதன்மை பெறுவதும், வடமொழி சமய மொழியாவதும் வியப்பன்று. பல்லவ அரசர் காலத்தும் பிற்காலச் சோழ அரசர் காலத்தும் வடமொழி சமயமொழியாக மாறியிருக்கலாம்.

வினா: தமிழ் வடமொழியின் உதவியின்றி இயங்கமாட்டாதென ஒருசிலர் கூறுகின்றனர். அது உண்மையா?
விடை: ஆரியர் இந்திய நாட்டை அடைவதற்கு முன் தமிழ் பிறமொழிக் கலப்பின்றியே வழங்கிற்று. புத்தர், சைனர், பிராமண மதத்தினர் வருமுன், தென்னிந்தியாவில் கலப்பற்ற தமிழே வழங்கிற்று. பிற் காலத்தில் சில பிறமொழிச் சொற்கள் தமிழில் வந்தேறின. அவை களை நீக்கிவிட்டுத் தமிழை வழங்குதல் கடிதன்று. தமிழ் இலக்கி யங்களைப் பின் நோக்கி ஆராய்ந்து செல்லின் செல்லுந்தோறும் வடசொற்கள் அருகுதலைக் காணலாம்.

வினா: வடமொழி கடவுள் மொழியாதலின் அது தமிழிலிருந்து ஒரு போதும் சொற்களை இரவல் வாங்கமாட்டாது என்று சிலர் கூறு கின் றனர். அது உண்மையாகுமா?
விடை: வடமொழியில் பல தமிழ்ச் சொற்கள் இருப்பதை மொழி ஆராய்ச்சியாளர் நன்கு எடுத்துக் காட்டியுள்ளார்கள். வடமொழி யில் தமிழ் சொற்கள் இல்லை எனக் கூறுதல் பிறவிக்குருடன் சந்திர சூரியர் இல்லை எனக் கூறியது போலாகும்.

வினா: வடமொழியிற் காணப்படும் சொற்கள் தமிழில் காணப்பட்டால் அவை வடசொற்களா?
விடை: வடமொழியில் பல தமிழ் சொற்கள் உள்ளன எனக் கூறினோம். வடமொழி பழைய செர்மன் மொழிக்கு இனமானது. இந்து ஐரோப்பிய மொழிகளுக்குப் பொதுவல்லாதனவும், இந்திய ஆரிய மொழியில் மாத்திரம் காணப்படுவனவுமாகிய புதிய சொற்கள் அம் மொழிக்கு இந்திய மொழிகளினின்றும் கிடைத்தனவே. இவ்வகைச் சொற்கள் மிகப் பல ஆரியத்தில் உண்டு. ஆகவே அவை இந்திய மொழிகளாகும். ஆரியத்துக்கு முன் தமிழ் உண்மையால் பழைய தமிழ்ச் சொற்கள் பல ஆரியத்தில் ஏறியிருக்கின்றன. அவைகளுட் பல இன்று தமிழில் வழக்கு வீழ்ந்த பழந்தமிழ்ச் சொற்கள்.

வினா: “கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்-உன்னுதரத்துதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும்” எனப் பேராசி ரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் கூறியது மொழி ஆராய்ச்சிக்கு ஒத்ததோர் முடிபன்று என்கிறார் திரு. S. வையாபுரிப்பிள்ளை,1 B.A., B.L.,இது உண்மையா?
விடை: கன்னடம், தெலுங்கு, துளு மலையாளம் முதலிய மொழிகள், தமிழ் மொழியின் கிளைகள் என்பதே ஆராய்ச்சியாளரின் முடிவு. இதனைத் திராவிட ஆராய்ச்சிகள் என்னும் நூலில் திரு அனவரத விநாயகம்பிள்ளை M.A., அவர்கள் ஆராய்ந்து விளக்கியுள்ளார். அம்மொழிகள் தமிழ் தமக்குத் தாயல்லவெனக் கூறுவது வளர்ந்த பிள்ளைகள் தமது பெற்றோரைப் புறக்கணிப்பது போன்றதென லர்சரஸ் என்பார் கூறியுள்ளார். தலைச் சுழற்சியுள்ளவர்களுக்கு உலகம் சுழல்வது போலத் தோன்றுவது இயல்பு. ஆகவே இயற்கைக்கு மாறாகக் கூறும் மேற்கண்டார் கூற்று வலிதன்று.

வினா: வடசொற்களைத் தமிழில் சேர்க்காவிட்டால் தமிழ் வளர்ச்சி குன்றிவிடும் எனச் சிலர் கூறுகின்றனர். அது உண்மையா?
விடை: இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளின் முன் எழுதப்பட்ட தமிழ் நடையினும் பார்க்க, இன்று எழுதப்படும் தமிழ் நடையில் வட சொற்கள் மிகக் குறைவு. அதனால் தமிழ் அழகுறுகின்றது. தமி ழோடு சமக்கிருதச் சொற்களைக் கலந்து வழங்குவது அழகிய உடலில் அம்மைத் தழும்பு ஏறியது போலிருக்குமென, சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் கூறியுள்ளார்.

வினா: நெடுநாளாகத் தமிழில் வடசொற்கள் இருந்து வந்தமையின் நாம் வடமொழியைப் பயின்று அதற்கு நன்றி பாராட்டிக்கொண்டிருக்க வேண்டும் என ஒருசாரார் கூறுகின்றனர். அது ஏற்றதுதானா?
விடை: வெவ்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் அளவளாவிக் கூட்டுறவு உண்டாகும்போது ஒருவர் மொழியில் மற்றவர் மொழிச் சொற்கள் சில கலத்தல் இயல்பு. இவ்வாறு எகிப்திய, சுமேரிய, அக்கேடிய, எபிரேய, கிரேக்க, உரோமன் மொழிகளில் தமிழ்ச் சொற்கள் சென்று ஏறியுள்ளன. ஆங்கில மொழியில் பற்பல மொழிச் சொற்கள் சென்று ஏறியுள்ளன. அதனால் ஆங்கில மக்கள் அம்மொழிகளை யெல்லாம் கற்று, அம்மொழிகளுக்கெல் லாம் நன்றி கூறிக்கொண் டிருக்கிறார்களா? தமிழ் சில சமக்கிருதச் சொற்களைக் கையாண்டமையால் தமிழர் அதனைக் கற்று அதற்கு நன்றி பாராட்டவேண்டுமென்பது நகைப்புக்கிடமான கூற்றேயாகும். நம் முன்னோர் ஆரிய மக்களுக்குச் செய்தளித்தன வும், ஆரியரால் செய்யப்பட்டனவும் ஆகிய நூல்களைப் பயில விரும்பினால் தமிழர் அவைகளைத் தமிழில் திருப்பிக் கொள்ள லாம். இவ்வகை முறை பழைய பாபி லோனில் கையாளப்பட்டது. பழைய சுமேரிய மொழியில் புலவர்கள் இலக்கியங்களையும் பாடல்களையும் செய்து வந்தார்கள். பிற்காலத்தில் இதற்கு மாறாகப் புரட்சி உண்டாகி, பழைய நூல்கள் மக்கள் வழங்கும் மொழி யில் மொழிபெயர்க்கப்பட்டன. நூல்களும் அம்மொழியில் செய்யப்பட்டன.

வினா: பீழை, கழகம், மயில், சிகழிகை, பழம் முதலிய சொற்கள் முறையே பீடா, க்ல, மயூரம், சீர்ஷக, பல என்னும் வடசொற்களிலிருந்து வந்தன என, ஒருவர் வாதம் புரிகின்றார். அவர் கூற்று உண்மைதானா?
விடை: மயூர(ம்), பல(ம்) முதலியவை திராவிடச் சொற்கள் என்று கிற்றல் என்பார் காட்டியுள்ளார். இதனை மொழி ஆராய்ச்சி வல்ல எஸ்.கே. சட்டர்ஜி, பந்தேர்க்கார் முதலியோர் மேற்கோளாக ஆண்டுள்ளார்கள். மயில், பழம், பீழை, கழகம், சிகழிகை, முதலிய சொற்களிலிருந்தே மயூர, பல, பீடா, க்ல, சீர்ஷக முதலிய சொற்கள் தோன்றின. 1இந்து ஆரியமல்லாத மற்றைய ஆரியமொழிகளில் அச்சொற்களோ, அவைகளின் மூலங்களோ காணப்படாமையே இதற்குச் சான்று. ‘க்ல’ என்பதிலிருந்து கழகம் தோன்றிய தென்பதி லும் பார்க்கக் களம் என்பதிலிருந்து கழகந் தோன்றிய தென்பது மிக ஏற்றதாகின்றது. களன் என்னும் சொல் கழகம் என்னும் பொருளில் இலக்கண நூல்களில் வந்துள்ளது. “கேட்போர் களனே கால்வகை எனாஅ” என வரும் தொல்காப்பியச் செய்யுளி யல் சூத்திர அடியாலும் இதனை அறியலாம். கலை என்னும் சொல் தமிழாதலையும், அதிலிருந்து களம், காளை முதலிய பல சொற்கள் தோன்றியிருத் தலையும், காலின்ஸ் என்பார் திராவிட ஆராய்ச்சி என்னும் நூலில் காட்டியுள்ளார். காமாலைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சளாகத் தோன்றுவதுபோல, ஆரியக் காமாலை கொண்டு வருந்தும் ஆராய்ச்சியாளருக்குத் தமிழ்ச் சொற்கள் வட மொழிச் சொற்களாகக் காணப்படுதல் இயல்பே யாகும். அன்னோர் கூற்று அவைக்கேறாக் கூற்றுக்களே யாகும். மக்லீன் என்னும் ஆசிரியர் பழந்தமிழிற் காணப்படும் ஆரிய மெனக் கருதப்படும் சொற்கள் சந்தேகத்துக்குரியனவென் றும், அவை இருமொழிகளுக்கும் பொதுவாயுள்ளனவாகலாம் எனவும் கூறியுள்ளார்.

வினா: ஆரியம் வருமுன் வடநாட்டில் தமிழ் வழங்கியதென் பதற்குரிய சான்று உண்டா?
விடை: ஐரோப்பிய ஆரிய மொழிகள் போலல்லாது, இந்திய ஆரியம் ஒலிமுறையான மாறுதலடைந்திருத்தல், வேதமொழியில் தமிழ்ச் சொற்கள் காணப்படுதல் போன்றவை. ஆரியம் இந்திய நாட்டுக்கு வரும்போது அங்கு தமிழ் வழங்கியதென்பதை வலியுறுத்துவன. ஆராய்ச்சி வல்ல பந்தேர்க்கார், எஸ். சட்டர்ஜி முதலியோர் ஆரியர் வருகைக்கு முன் வடக்கே திராவிட மொழி வழங்கியதென்பதில் சந்தேகமில்லை எனக் கூறியுள்ளார்.2

வினா: இன்று வடநாட்டில் வழங்கும் மொழிகள் ஆரிய இனத்தைச் சேர்ந்தனவா?
விடை: ஆரியர் வரும்போது வடக்கே தமிழ் வழங்கிற்று, பின்பு இரு மக்களும் அளவளாவிக் கலந்தார்கள்! அப்பொழுது தமிழோடு, பல இரு மொழிச் சிதைவுகளும் கலந்து புது மொழிகள் எழுந்தன. வட நாட்டு மொழிகள், சொற்போக்கில் ஆரியம்போல் தோன்றி னாலும், இலக்கண அமைப்பில் திராவிடமாயுள்ளன என ஆராய்ச்சி வல்ல பி.தி. சீனிவாச ஐயங்காரவர்கள் ‘தற்கால இந்தியா’ என்னும் தமது நூலிற் காட்டியுள்ளார்.

வினா: கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம் முதலிய மொழிகள் எவ்வாறு தோன்றின?
விடை: தமிழ் உறழ்ந்தும் பிறழ்ந்தும் வழங்கப்பட்டதாலும் பல ஆரியச் சொற்களைக் கையாண்டமையாலும் உண்டாயின. இன்று அம் மொழிகளிலிருந்து ஆரியச் சொற்களை நீக்கிவிட்டால், மீந்திருப் பன வழக்கொழிந்தனவும், இன்று வழங்குவனவுமாகிய தமிழ்ச் சொற்களாகும். அம்மொழி இலக்கணங்கள், வடசொற்களை, அம் மொழிகளில் சேர்த்துக் கொள்வதற்குத் தனி விதிகள் கூறுகின்ற மையின், அவை ஆரியத்தை அன்னிய மொழியாகக் கொண்டன என்பதும் தெளிவாகும்.

வினா: திராவிடம் என்பதிலிருந்து தமிழ் பிறந்ததெனச் சிலர் கூறுகின் றனர். இது உண்மையாகுமா?
விடை: திரை இடம் என்பது கடற்கரையை அடுத்த தென்னாட்டைக் குறிக்கப் பூமி சாத்திர சம்பந்தமாக முற்காலத்தில் வழங்கப்பட்ட தென்றும், அது பிற்காலத்தில் உச்சரிப்போரின் சோர்வினால்! திராவிடம் எனப்பட்டதென்றும், பூமி சாத்திரம் சம்பந்தமாக வழங்கிய இப்பெயர், தென்னாட்டு மக்களையும் அவர் மொழியை யும் குறிக்க வழங்குவதாயிற்று என்றும், கிளிமென்ட் ஸ்கோனர் என்னும் செர்மன் ஆசிரியர் நன்கு ஆராய்ந்து காட்டியுள்ளார். திராவிடம் என்பது திரையிடம் என்னும் தமிழ்ப் பெயரின் சிதைவே. வட மொழிக் கட்சியினர் திராவிடம் என்பது வட மொழிச் சொல் எனக் கொண்டு அதனின்றே தமிழ் உண்டாயிற் றென வீண்வாதம் புரிவர். திராவிட மென்பது தமிழின் கிளை மொழிகளாகிய கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம் முதலிய மொழிகளைக் குறிக்க கால்ட்வெல் என்னும் கிறித்துவப் பாதிரியாரால் மொழி தொடர் பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வினா: சேர சோழ பாண்டிய நாடுகள் எவ்வெல்லைகளுக்குட்பட்டு இருந்தன?
விடை: வடக்கே திருவேங்கடமும் (திருப்பதி மலை) தெற்கே கன்னியா குமரியும், கிழக்கும் மேற்கும் கடலுமாகிய எல்லைகளுக்கு உட்பட்டு.

வினா: இது எப்படி அறியப்படும்?
விடை: தொல்காப்பியத்தில் “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்” எனக் கூறப்பட்ட `தென்பாண்டி, குட்டங், குடம், கற்கா, வேண், பூழி, பன்றி, அருவா, அருவாவடதலை, சீதம், புனனாடு, மலைநாடு முதலிய நாடுகள் திருவேங்கடத்துக்கும் குமரி முனைக்கும் அகத்தே உள்ளமை யானும் மூவேந்தரின் நாடுகள் தமிழ் வழங்கும் இடங்கள் எனத் தொல்காப்பியம் கூறுகின்றமையானும்.

வினா: திருவேங்கடத்துக்கு மேலே என்ன மொழி வழங்கிற்று?
விடை: தெலுங்கு

வினா: ஒரிசாவில் முன் தமிழ் வழங்கிற்றென்று ஆராய்ச்சியாளர் கூறு கின்றார்கள். அவ்வாறாயின் தமிழ் திரிந்து தெலுங்கானது எப்பொழுது?
விடை: புத்தர் காலத்துக்குப் பின் ஒரிசாவில் வழங்கிய தமிழ் மாறுபடத் தொடங்கியிருக்கலாம். தெலுங்கில் இலக்கியங்கள் கி.பி. ஒன்பது பத்தாவது நுற்றாண்டுகளிலேயே தோன்றவாரம்பித்தன. இலங்கைத் தீவிலும் பழங்காலத்தில் தமிழ் வழங்கிற்று. அங்கு பாலிமொழி சமய மொழியான போது, பழைய தமிழ் திரிந்து சிங்களமாயிற்று. சிங்களத்திலும் பழைய இலக்கியங்கள் 10ஆம் நூற்றாண்டு வரையில் தோன்றின. இதனால் முன்பின் கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் வங்காளத்தில் தமிழ் தெலுங்காக மாறத் தொடங்கிற்று எனக் கூறலாம்!

வினா: முற்காலத்தில் தமிழ் எவ்வாறு வளர்க்கப்பட்டது?
விடை: அரசர் பெருமக்கள் ஆதரவாலும், பாண்டிய அரசர் கூட்டிய தமிழ் கழகங்களாலும். முற்காலத்தில் பாண்டியரின் ஆதரவில் மூன்று சங்கங்கள் நடந்தன. அவை முதல், இடை கடைச் சங்கங்கள் எனப்படும்.

வினா: முதற்சங்கம் எங்கே நடந்தது?
விடை: குமரிமுனைக்குத் தெற்கே பல நாடுள் இருந்தன. அங்கு மதுரை என்னும் நகரம் இருந்தது. அங்கு முதல் சங்கம் நடைபெற்றது. இந் நகரையும் அதனைச் சார்ந்த நாடுகளையும் கடல் கொண்டது.

வினா: இரண்டாவது சங்கம் எங்கே நடந்தது?
விடை: கபாடபுரம் என்னும் நகரில். இது தாம்பிரபரணி முகத்துவாரத்தி லிருந்தது. இதனையும் ஒரு காலத்தில் கடல் கொண்டது.

வினா: மூன்றாவது சங்கம் எங்கே இருந்தது?
விடை: இது திருப்பரங்குன்றத்துக்கு நேர் கிழக்கே இருந்த மதுரையில். இன்றைய மதுரை முன் மதுரையிருந்த இடத்திலில்லை.

வினா: தமிழ்ச் சங்கத்தைப் பற்றிய வரலாறு எங்கே காணப்படு கின்றது?
விடை: இறையனாரகப் பொருளுரையிலும், அதற்குப் பிற்பட்ட நூல் களிலும். சங்கம் இருந்ததென்பதற்குச் சான்றுகள் சங்க நூல்களி லும் ஆங்காங்கு காணப்படுகின்றன. கூடல் என்பது சங்கம் இருந்தமை காரணமாகத் தோன்றிய பெயர்.

வினா: கன்னியாகுமரிக்குத் தெற்கே நிலம் இருந்ததென்பதற்குச் சான்றுகள் உண்டா?
விடை: சிலப்பதிகாரத்திலும் அதற்கு அடியார்க்குநல்லார் எழுதிய உரையிலும் பேராசிரியர் நச்சினார்க்கினியர், இளம்பூரணர் முதலாயினோர் எழுதிய உரைகளிலும் காணப்படுகின்றன. குமரியாற்றுக்கும் பஃறுளியாற்றுக்குமிடையே 49 தமிழ் நாடுகள் இருந்தன என அடியார்க்கு நல்லார் உரையில் காணப்படுகின்றது. கடல் கொண்ட வற்றுள் பஃறுளி ஆறு, குமரி ஆறு, குமரிமலை முதலியன சில. பஃறுளியாற்றைச் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன.

வினா: இதற்கு வேறு சான்றுகள் உண்டா?
விடை: புராணக் கதைகளும், இலங்கைப் புத்த நூல்களும் சான்றளிக் கின்றன. நில நூலார் இந்து மாக்கடலிலுள்ள தீவுகள் முன் இருந்த பெரிய நிலப்பரப்பில் காணப்பட்ட மலைகளின் சிகரங்கள் என்கின்றனர். இலங்கை, மேரு மலையின் ஒரு சிகரம் என்றும், மேரு உலகுக்கு மத்தியில் (நடுக்கோட்டில்) உள்ளதென்றும் புராணங்கள் கூறுகின்றன. மாலைத் தீவுக் கூட்டங்களும் இலங்கைத் தீவும் முன்பு தரையால் இணைக்கப்பட்டிருந்தன வென்று நில நூலார் கூறுகின்றனர். பாஸ்கராச்சாரியர் என்னும் பழைய வான நூலாசிரியர் நடுக்கோடு, இலங்கைக் கூடாகச் செல்கின்றதெனக் கூறியுள்ளார்.

வினா: முதல் தமிழ்ச் சங்கத்துக்குத் தலைவராயிருந்தவர் அகத்திய ரென்றும், அவர் ஆரிய முனிவர் என்றும் கூறுகின்றனர். அது உண்மையா?
விடை: தமிழ்ச் சங்க மென்பது ஆரியர் இந்திய நாட்டுக்கு வருவதன் முற்பட்ட நிகழ்ச்சி. அகத்தியரின் தந்தை மித்திராவருணன் எனப் படுதலின் அகத்தியர் ஆரியரல்லரென்றும், வேதகால இருடிகளிற் பலர் திராவிடர்கள் என்றும் ஆராய்ச்சியாளர் நாட்டியுள்ளார்கள். ஆரியர் கி.மு. 1000 வரையில் தென்னாட்டுக்கு வரத்தொடங்கினர். அகத்தியர் இராமாயண காலத்தில் கோதாவரிக் கரையில் இருந்தவராகக் காணப்படுகின்றனர். புராணங்களில் அகத்தியர் மேருவை அடக்கினார் எனக் காட்டப்படும் கதைக்கு, அகத்தியர் தமிழ்நாடு வந்தார் என்று பொருள் விரித்தல் ஆகாது. புராணக் கதைகள் பொய்யும் புளுகும் மலிந்த நூல்கள். வேறு சான்றுகள் இருப்பின் புராணக் கூற்றுகள் ஆராயப்படும். செங்கோன் தரைச் செலவில் மூத்தூர் அகத்தியன் என்னும் ஒரு புலவரின் பெயர் காணப்படுகின்றது. மணி மேகலையில் அகத்தியரின் வரலாறு பழங்கதையாக மாறிவிட்டது. அவர் தமிழோடு சம்பந்தப்பட்டவ ராக யாண்டும் காணப்படவில்லை. சிதிய மக்களிடையே, அகத் திரிசிகள் எனப்பட்ட ஒரு கூட்டத்தினர் வாழ்ந்தார்கள் என எரதோதசு (Heradotus) என்னும் ஆசிரியர் கூறியுள்ளார். அகத்தியர் என்னும் பெயருடன் பலர் இருந்தார்கள். பெதுருங் கேரியன் அட்டவணைகளில் (கி.பி. 100?) தென்னிந்தியாவில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்ட அகஸ்தஸ் கோயிலென்பது அகத்தியர் கோயிலென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவை போன்ற பல காரணங்களால் அகத்தியரைப் பற்றிய வரலாறு நன்கு அறிய முடியாமல் மயக்கமளிப்பதாயிருக்கின்றது. சிவபத்தராகிய ஒரு அகத்தியர் விளங்கினார் என்பது அகத்தீச்சுரம் முதலிய பழைய கோயிற் பெயர்களால் விளங்குகின்றது. அகத்தியரை ஆரியர் எனக்கொண்ட புராண காலத்தினர், அகத்தியரைத் தமிழோடு சம்பந்தப்படுத்தினார்கள் எனத் தெரிகின்றது. இக்காலம் அகத்தியர் பெயரால் வழங்கும் வாகடங்களைப் போல, அவர் பெயரால் சில இலக்கணங்களும் தோன்றியிருக்கலாம்.

வினா: கி.மு. 1000 வரையில் தமிழ்மொழி வேறு மொழியாக இருந் திருக்குமா?
விடை: இன்றைய ஆங்கில மொழியை ஆராந்து பின்னோக்கிச் செல்லச் செல்ல அது ஆங்கிலமாகத் தோன்றமாட்டாது. ஆனால் தமிழின் நிலை அதுவன்று. அது பழமை தொட்டுத் தன் பழையவடிவோடு நிலவுகின்றது. பாலஸ்தீன அரசனாகிய சாலமன் காலத்தில் எபிரேய மொழியில் சென்று வழங்கிய தமிழ்ச்சொற்களும், கி.மு. 500 வரையில் கிரேக்க மொழியிற் சென்று வழங்கிய சொற்களும், மத்திய ஐரோப்பாவில் ஆரியர் பரவுவதன் முன் வழங்கியன வென்று கிளி மென்ட் ஸ்கோனரால் எடுத்துக் காட்டப்பட்ட சொற்களும், ஹெரஸ் பாதிரியார் மொகஞ்சதரோ முத்திரைகளை ஒலி முறையாக வாசித்த வாசிப்பிற் காணப்படும் பல சொற்களும், இன்றும் தமிழில் வழங்கும் சொற்களாகக் காணப்படுகின்றன. சங்க காலத் தமிழுக்கும் இன்றைய தமிழுக்கும் என்ன வேறுபா டுண்டோ அவ்வகை வேறுபாடே சங்ககாலத் தமிழுக்கும் அக்காலத் தமிழுக்கும் இருந்திருக்கலாம்.

வினா: தொல்காப்பியர் ஆரியர் என சிலர் கூறுகின்றனர். அது உண்மையா?
விடை: தொல்காப்பியர் ஆரியர் என்று சொல்வதற்குரிய ஆதாரம் ஒன்றேனும் இல்லை. தொல்காப்பியர் தனது நூலில் ஆரியநாட்டு வழக்குகள் சிலவற்றைத் தமிழ் வழக்குகளோடு ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். டாக்டர் போப், வீரமாமுனிவர் முதலியோர், தம் மினத்தவர் தமிழ் பயில்வதற்கு ஏற்ற முறையில் தமிழ் இலக்கணஞ் செய்தார்கள். அவர்கள், தமிழில் இலக்கணம் இல்லாமையால், தமிழ் இலக்கணஞ் செய்யவில்லை. ஆந்திர நாட்டினரே தொடக் கத்தில் வடமொழியைப் பயில்வதில் ஆர்வங் கொண்டிருந்தனர். இது அபஸ்தம்பர், போதாயனர் முதலிய ஆந்திர நாட்டினர் வட மொழியைக் கற்று, அம்மொழியில் நூல்கள் எழுதினமையால் நன்கு புலப்படும். அவ்வகை ஒருவரே தொல்காப்பியர் எனத் தெரி கின்றது. இவர் வடமொழிப் பயிற்சியுடையார், தென் மொழியைக் கற்பதற்கு ஏற்ற முறையில் நூல் செய்தாராகலாம். தமிழில் திசைச் சொல் எனக் கொள்ளப்படும் செப்பு என்னும் சொல்லைத் தொல் காப்பியர் பலவிடங்களில் ஆண்டுள்ளமையும் இதற்கு சான்றாகும். இந்திரனுடைய தலைநகராகிய அமராவதி, கிருஷ்ணாநதி முகத் துவாரத்திலுள்ளது. இவ்விந்திரன் சம்பந்தப்பட்ட நூல், தொல் காப்பியத்தில் சொல்லப்படும் ஐந்திரமாகலாம். தொல்காப்பியத் தில் ஆரியச் சார்பு இருப்பின், அதனால் தமிழுக்கு நேரக்கிடக்கும் இழுக்கு யாதுமில்லை என்க.

வினா: தொல்காப்பியத்தில் வரும் அந்தணர் ஆரியப் பிராமணரையும், மறை, ஆரிய வேதங்களையும் குறிக்கின்றனவெனச் சிலர் கூறுவர், அது உண்மையா?
விடை: வீரமாமுனிவர் கத்தோலிக்க குருமாரை வேதியர் எனவும், தமது மதநூலை வேதம் எனவும் கூறியுள்ளார். சொல்லொற்றுமை பற்றி கத்தோலிக்க குருமார் ஆரியப் பிராமணரும், அவர் வேதம் ஆரிய வேதமுமாய் விடுமா? சொற்களுக்கு இடமறிந்து பொருள் கொள்ள வேண்டும். தொல்காப்பியர் ஆரிய வேதத்தைக் குறிக்க மறை என்னும் சொல்லையும், பிராமணரைக் குறிக்க அந்தணர் என்னும் சொல்லையும் ஓரோரிடத்து ஆண்டுள்ளார். அதனால் அவர் நூலில் வரும் அந்தணர், மறை என்னும் சொற்கள் எல்லாம் ஆரியப் பிராமணரையும், ஆரிய வேதங்களையும் குறிக்கின்றன வென்பது அறியாமையாகும்.

வினா: பார்ப்பார் ஆரியரா? தமிழரா?
விடை: தமிழ்நாட்டில் காணப்படும் யூரேசியர் என்னும் வகுப்பினர், தமிழரா? ஐரோப்பியரா? என்னும் கேள்வி கேட்டலை ஒத்தது இக் கேள்வி. யூரேசியர் எனப்படுவோர் எல்லோரும் ஐரோப்பிய தந்தை யருக்கு இந்தியத் தாய்மாரிடம் பிறந்தவர்களல்லர். இவர்களைப் பற்றி தேஸ்ரன் என்பார் தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். ஒரு ஐரோப்பியன் இந்தியப் பெண் ஒருத்தியோடு தொடர்பு வைத்திருந்தால், அப்பெண்ணின் குடும்பத்தவர்கள் ஐரோப்பிய உடை அணிந்து கொண்டு தம்மை யூரேசியர் எனச் சொல்லிக்கொண்டனர் என அவர் குறிப்பிட்டுள் ளார். அதனை ஒப்பவே ஆரியப் பிராமணர் தொடர்பு பார்ப்பன ரிடையே உண்டானபோது, அவர்கள் எல்லோரும் தம்மை ஆரியர் எனச் சொல்லி ஆரிய வேடம்பூண்டதோடு அவர்கள் சமயத்தை யும் தழுவலாயினர். யூரேசியரை எப்படி இந்தியர் அல்லது ஐரோப் பியர் என்று கூற முயடியவில்லையோ, அப்படியே பார்ப்பனரை யும் நாம் ஆரியர் அல்லது தமிழர் எனக் கூற முடியவில்லை. அவர்கள் நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கும் இரத்தத்தில் நூற்றுக்கு எண்பது தமிழ் ரத்தம் எனவே கூறலாம்.

வினா: பார்ப்பனர் என்போர் யார்?
விடை: இவர்கள் கோயில்களை மேல்பார்த்த தமிழ் மக்களே? இவர்கள் காலத்தில் பெருகித் தனிக்கூட்டத்தினராயினர். பிற்காலத்தில் பிராமணர் பிரமாவின் முகத்தில் பிறந்தவர்கள் என்னும் கட்டுக் கதை எழுந்தது. அக்கதையைக் கொண்டு தாம் பிரமாவின் முகத்தில் பிறந்தவர்க ளெனப் பார்ப்பனர் பலர் நம்பி வருகின்றனர். தம் குல முதல்வர்கள் வடநாட்டு முனிவர்கள் எனவும் கொள்கின் றனர். இவை நகைப்புக் கிடமானவை.

வினா: அந்தணர் எனப்பட்டோர் யார்?
விடை: இவர்கள் துறவொழுக்கங்கொண்டு உயிர்களிடத்து அன்புடைய ராய் விளங்கிய துறவிகள். பிற்காலத்தில் பார்ப்பார், பிராமணர், அந்தணர் என்னும் பெயர்கள், கோயிற் பூசை செய்யும் பூசாரிக் குலத்தினரைக் குறிக்க வழங்கலாயின.

வினா: தமிழ் கெட்டுவிட்டதென்கிறார்கள்; தமிழ் எப்படிக் கெட்டது?
விடை: வடநாட்டினின்றும் பிராமணர் தென்னாடு போந்தார்கள் எனக் கூறினோம். இவர்கள் சிறிது சிறிதாக அரசினர் தயவைப் பெற்று அவர்களைத் தம் மதத்துக்கு இழுத்தனர். அரசினர் உதவியால் சமக்கிருதம் தென்னாட்டில் சமய மொழியாயிற்று. பார்ப்பனரும் பிராமணரும் தமது தாய்மொழி சமக்கிருதம் எனக் கொண்டனர். அவர்கள் தமிழை அன்னிய மொழியெனக் கொண்டனர். ஆகவே, அவர்களுக்கு வடமொழியிடத்துள்ள பற்றுப் போலத் தமிழில் இருக்கவில்லை. அவர்கள் தமிழோடு வட மொழிச் சொற்களைக் கலந்து வழங்குவதிற் சிறிதும் பின் நிற்கவில்லை. இவர்கள் வாழ்க்கைப் பொதுமக்களும் சிறிது சிறிதாகக் கையாண்டனர். இதனால் தமிழ் மிகக் கேடடைந்தது. ஒரு காலத்தில் சரிக்குச் சரி வடமொழி கலந்த நடை, மணிப்பிரவாளம் என்னும் பெயருடன் தமிழ் நாட்டில் வழங்கிற்று. தமிழ் அறிஞரின் விடாப்பிடியான எதிர்ப்பினாலும், உழைப்பினாலும், நாள் வீதம் பிறமொழிச் சொற்கள் தமிழினின்றும் களையப்பட்டுத் தமிழ் இன்றைய நிலையில் காணப்படுகின்றது. இன்று ஐம்பது ஆண்டுகளின் முன் எழுதப்பட்ட தமிழ் நடையையும் இன்றைய தமிழ்நாட்டையும் நோக்கினால் இது விளங்கும்.

வினா: தமிழை எப்படித் திருத்தலாம்?
விடை: தமிழில் பிறமொழிச் சொற்களைக் கண்டபடி நுழைக்கா மலும், நுழைக்கும் இன்றியமையாமை நேர்ந்தால், அவைகளைத் தமிழ் உச்சரிப்பு முறையாக மாற்றி வழங்கவும் வேண்டும்.

வினா: இந்தி தென்னாட்டில் கட்டாயக் கல்வியானால் அது எப்படிப் தமிழைக் கெடுக்கும்?
விடை: சமக்கிருதம் எப்படித் தமிழைக் கெடுத்தது; அது போலக் கெடுக்கும்.

வினா: இந்திப் ‘பிரச்சாரத்தை’த் தமிழ் நாட்டில் நடத்துபவர் யார்?
விடை: தம்மை ஆரியர் எனச் சொல்லிக்கொள்ளும் வகுப்பினர்.
வினா: அவர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள்?
விடை: அது, தமது தாய்மொழி எனக் கொள்ளும் ஆரியத்துக்கு உறவான மொழி எனக் கருதுவதால்.

வினா: ஆரியம் தமிழ் என்னும் போராட்டம் முற்காலத்தும் இருந்ததா?
விடை: ஆரியர் இந்திய நாட்டுக்கு வந்தது முதல் உண்டு. தாசுக்கள்-ஆரியர் போர்கள் என ஆரிய வேதங்களிற் கூறப்படுவன, ஆரியருக்கும் தமிழருக்கும் இடையே நேர்ந்த போர்களே.

வினா: சமய குரவர் காலத்தில் இப்போராட்டங்கள் இருந்தனவா?
விடை: “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” “ஆரியந் தமிழோ டிசையானவன்” எனத் தேவாரத்தில் வருவனவற்றால் இதை நன்கு அறியலாகும். நெடுகிலும் பூசல் விளைவித்துக்கொண்டிருந்த இக் கட்சியினரைச் சந்துபடுத்தவே அவ்வாறு கூறப்பட்டது. வைண வத்தில் வடகலை தென்கலை என்றிருப்பதும் முற்காலப் பூசலின் எதிர் ஒலிகளே.

வினா: சமய குரவர்களுக்குப் பிற்காலத்தும் இப்பூசல்கள் இருந்தனவா?
விடை: திருவிளையாடற் புராணத்தில் பரஞ்சோதி முனிவரும் காஞ்சி புராணத்தில் சிவஞான முனிவரும் கூறியுள்ளவைகளால் அக்காலத் தில் இப்பூசல்கள் மிக்கிருந்தன என்று விளங்குகின்றது.

வினா: பேராசிரியர் சுந்தரம்பிள்ளை காலத்தில் இப்போர்கள் இருந்தனவா?
விடை: “ஆரியம்போல் உலக வழக்கழிந் தொழிந்து சிதையாவுன் - சீறிளமைத் திறம் வியந்து செயன் மறந்து போற்றுதுமே” என்றும், “சதுமறை ஆரியம் வருமுன் சகமுழுவதும் நினது” எனவும் அவர் கூறியவை கொண்டு அக்காலத்தில் ஆரிய-தமிழ்ப் பூசல்கள் எவ்வளவு மும்முரமடைந்திருந்தன வென்று நாம் உய்த்துணரலாம். சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் தொல்காப்பியம், கலித் தொகை முதலிய நூல்கள் பதிப்பிக்கின்ற காலத்திலேயே பல ஆரியக் கட்சியினர் பத்திரிகைகளில் தோன்றி அவரைப் பலவாறு எதிர்த்தனர் என்பது அவர் பதிப்பித்த கலித்தொகைப் பதிப்புரை யால் நனி விளங்கும். புலவர் புராணம் செய்த முருகதாசரையே பல ஆரியக் கட்சியினர் எதிர்த்தார்கள் என அவர் தமது `தமிழலங் காரம்’ என்னும் நூலில் கூறிப்பிட்டுள்ளார். இன்றும் இப் போராட்டம் இல்லாமலில்லை. கலைச்சொல், அகராதியை ஒட்டி நடந்த மாநாடுகளில் பூசல்களே இதற்கு எடுத்துக்காட்டுக்களாகும்.

வினா: இன்று வடமொழிக் கட்சியினர் எதற்காகப் போராடுகிறார்கள்?
விடை: முற்காலத்தைப் போலவே மொழியைப் பற்றிய கருத்து இன்றும் பொருளாதார அரசியல் சம்பந்தம் பெற்றுள்ளது. முற்காலத்தில் வடமொழி படிப்பதற்கு மானியங்கள் விடப்பட்டன. ஆலயங் களிலே வேதமோதுகிறவர்களுக்கு உணவும் தக்கணையும் கிடைத்தன. பிற வாய்ப்புக்களுமிருந்தன. அரசன் மூடபக்தியினால் கிராமங்களையே பிரமாணருக்குத் தானஞ் செய்தான். அதனால் அவன் தனது பாவத்தைக் கழுவிவிடலாமென எண்ணினான். இவையெல்லாம் ஆரியம் தெய்வ மொழியென்றும் அதனைப் பயின்றவர் பூதேவர் என்றும் எழுந்த மூட நம்பிக்கைகளை அடிப் படையாகக் கொண்டன. ஒரு கூட்டத்தார் உடல் உழைப்பின்றிச் சுகவாழ்வு பெறுவதற்கு வடமொழி காரணமாயிருந்தது. இன்றும் ஓரளவு இருக்கின்றது; பூதேவராகிய கூட்டத்தினர் உயர்ந்தவர்கள் என்னும் பொய்க் கருத்தினால் அவர்கள்அரசியலிலும், வலிமை யடைந்துள்ளார்கள். வடமொழி விழுந்து, தமிழ் ஓங்கிவிட்டால் பூதேவர் பூமியில் விழுந்துவிடுவார்கள். இதுவரையும் பொது மக்க ளிடையே இருந்துவரும் செல்வாக்கும் மதிப்பும் பறந்துவிடும். தாமும் எல்லாரையும் போலவே உடல் வருந்தி உழைக்க நேரும் என்னும் அச்சங்கள் உள்ளிருந்து உந்துவதால் அவர்கள் தமிழை எதிர்க்கிறார்கள். தமிழ் எதிர்ப்பென்பது ஒரு கூட்டத்தாரின் வாழ்க்கைப் போராட்டமேயாகும்.

வினா: தென்னிந்தியாவில் பல ஆலயப் பெயர்கள் வடமொழிப் பெயர்களாகவே காணப்படுகின்றன. அவ்வாறிருப்பதற்குக் காரண மென்ன?
விடை: வெள்ளையர் நாட்டுக்குத் தலைவராய் வந்தபோது தாம் விரும்பிய வாறு இடங்களுக்கும், வீதிகளுக்கும் மேல் நாட்டுப் பெயர்களை இட்டார்கள். பொது மக்கள் விரும்பாவிடினும் அதனை அவர் களால் தவிர்க்க முடியவில்லை. பிராமணரும், பிராமண மதத்தைத் தழுவிய பார்ப்பனரும் கோயில்களுக்கு அதிகாரிகளானபோதும், ஆரியம், கடவுள் மொழி என்னும் மூடக்கொள்கை பரவிய போதும், பழைய தமிழ்ப் பெயர்கள் ஆரியமாக்கப்பட்டுவிட்டன.

வினா: ஆலாசிய மான்மியம் முதலிய புராணங்களில் தமிழ் அரசர் பெயர்கள் வடமொழிப் பெயர்களாகக் காணப்படுகின்றன, ஏன்?
விடை: புராணம் எழுதியவர்கள் தமிழ் பெயர்களை வடமொழிப்படுத்தி எழுதினார்கள்.

வினா: தமிழை வளர்ப்பதற்குச் சிறந்த வழி எது?
விடை: முதலில் ஆலயங்களிலிருந்து ஆரியத்தை ஒழிக்க வேண்டும்; தமிழைச் சமய மொழியாக்க வேண்டும், தமிழ்க் கலைச்சொல், தமிழ் அகராதி, தமிழ்க் கலை அகராதி போன்றவை செய்யும் குழுவில் ஆரியரல்லாத தமிழரே இருக்க வேண்டும். கலைச் சொல் ஆக்கத்தில் வடசொற்கள் இருக்கலாமென வாதாடிய கட்சியின ரும் இருந்தார்கள் என்பது உலகுக்கு ஞாபகமிருக்கலாம்.

வினா: இசைக்கு மொழி முக்கியமில்லை. தமிழருக்கு இந்தி, தெலுங்குப் பாட்டுக்கள்தான் ஏற்றன என ஒரு கட்சியினர் கூறுகின்றனர். அது எப்படி?
விடை: இது தமிழனுக்குச் சமயமொழி ஆரியம்; தமிழ் மனித மொழி எனக் கூறப்படுவதை ஒத்த மூடத்தனம். பாடல்களுக்காகவே இசைகள் தோன்றின. இசையில் சுவைக்க வேண்டியவை மூன்று பொருள்கள். அவை, சொற்சுவை, பொருட்சுவை, இசைச்சுவை, தமிழன் விளங்க மாட்டாத பாட்டில் இம்மூன்று சுவைகளும் காணப்பட மாட்டார்.

வினா: கோயில்களின் உள்ளே நின்று ஆரியம் பாடுகிறார்கள்; வெளியே நின்று பண்டாரம் தேவராம் பாடுகிறார். ஏன் அப்படி?
விடை: ஆரியம் “தேவ பாஷை” தமிழ் “மனித பாஷை” என்னும் கொள் கையிலிருந்து வருவதால் இது தமிழனுக்கு நாணத்தக்க செயல்.

வினா: திருக்குறள் எப்பொழுது செய்யப்பட்டது?
விடை: உக்கிரப் பெருவழுதி காலத்தில் திருக்குறள் செய்யப்பட்டதென் றும் கன்னபரம்பரை வரலாறுள்ளது. உக்கிரப் பெருவழுதி கடைச் சங்கத்துக் கடைசி அரசனாவான். இவன் காலம் கி.பி. 50 வரையில்.

வினா: திருக்குறள் கி.பி. ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டு அளவில் செய்யப்பட்ட நூல் எனச் சிலர் கூறுகின்றனர். இது உண்மை யாகுமா?1
விடை: சிலப்பதிகாரம் சேரன் செங்குட்டுவனின் தம்பியாகிய இளங்கோ வடிகளாற் செய்யப்பட்டது. சேரன் செங்குட்டுவன் இலங்கைக் கய வாகு காலத்தில் இருந்தவன். இவன் காலம் கி.பி. இரண்டாம் நூற் றாண்டு. இவன் கண்ணகி வழிபாட்டை இலங்கைக்குக் கொண்டு சென்றானென்று இராசாவளி என்னும் சிங்கள நூல் கூறுகின்றது. இலங்கையின் பழமையே கண்ணகி வழிபாடு இருந்ததற்குப் பல சான்றுகள் உண்டு. சிங்களவர் பத்தினிக் கடவுளைப் “பத்தினி தேவோ” என்று அழைத்தார்கள். அவர்கள் வைத்து வழிபட்ட பத்தினிச் சிலம்புகள் பல, கொழும்பு நூதன பொருட் காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளன. சிங்கள மொழியில் பத்தினிக்கட வுளைப் பற்றிய நூல்கள் எழுதப்பட்டுள்ளன. சிலப்பதிகாரம், பத்தினிக்குத் கல் நடும்போது இலங்கைக் கயவாகு வந்திருந்தான் என்று கூறுகின்றது. சிலப்பதிகாரத்தில் திருக்குறளடிகள் எடுத்து ஆளப்பட்டன. இளங்கோவடிகள் திருக்குறள் ஆசிரியரைப் பொய்யில் புலவன் எனக் குறிப்பிடுகின்றார். இதனால் திருவள் ளுவர் சிலப்பதிகார காலத்துக்கு முந்தியவரெனத் தெரிகின்றது. ஆகவே திருக்குறள் உக்கிரப் பெருவழுதி காலத்தில் செய்யப்பட்ட தென்றும் வரலாறு கொள்ளத்தக்கதாகின்றது.

வினா: பி.தி. சீனிவாச ஐயங்கார் திருக்குறள் ஆறாம் நூற்றாண்டில் செய்யப்பட்டதெனக் கூறியதற்குக் காரணம் யாது?
விடை: திருக்குறளில் வடசொற்களும் ஆரியக் கருத்துக்களும் வந்துள்ள மையால், அது கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நூல் அன்று என ஐயங்கார் கூறியுள்ளார். இவர் கருத்தினை ஆராய்ச்சி யாளர் எவரேனும் ஏற்றுக்கொள்ளவில்லை. திரு. வி.ஆர். இராமச் சந்திர தீட்சிதர், அவர்களே தமது “தமிழ் இலக்கிய வரலாற்று ஆராய்ச்சி”1 என்னும் நூலில், திருவள்ளுவர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் எனக் கூறியுள்ளார். பி.தி. சீனிவாச ஐயங்கார் பிழை பட்டவிடங்கள் பல உண்டு. ஆரியர் இந்திய மக்களே; அவர்கள் பிறநாட்டினின்றும் வந்தவர்க ளல்லர்; சமயக் கொள்கை பற்றி அவர்கள் ஆரியர் எனப்பட்டனர் என ஒரு புதுக் கருத்தையும் அவர் வெளியிட்டார். அக்கருத்தை வரலாற்றுவல்லார் எவரேனும் இதுவரையில் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனை ஒத்ததே அவர் திருக்குறளைப் பற்றிக் கொண்ட கருத்துமாகும்.

வினா: மொழியைக் கொண்டு நூலின் வயதை அறியலாமென்கிறார்கள்; அது எப்படி?
விடை: அது உண்மையே. பல சான்றுகளுள் மொழிச் சான்றும் ஒன்று. இன்று ஆனந்தவிகடனில் எழுதப்படும் நடையையும் ஆசிரியர் மறைமலை அடிகள் எழுதும் நடையையும் ஒப்புநோக்கி, இரு எழுத்துக்களும் வெவ்வேறு நூற்றாண்டில் எழுதப்பட்டன எனக் கூறலாமா? இன்று பிராமணர் எழுதும் தமிழ் நடைக்கும், பிராமணரல்லாதார் எழுதும் நடைக்கும் அதிக வேறுபாட்டைக் காணலாம். இவ்வாறே முற்காலத்தும் இருந்தது.

வினா: திருக்குறள் முப்பாலாகச் செய்யப்பட்டதன் காரணம் வடமொழி வழக்குப்பற்றி எனச் சிலர் கூறுகின்றனர். அது உண்மையாகுமா?
விடை: முப்பாலாக நூல் செய்தலே தமிழர் மரபு என்பது, “அந்நிலை மருங்கின் அறமுதல் ஆகிய-மும்முதற் பொருட்கும் உரிய என்ப” (தொல். செய்யுள் 106) என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தால் நன்கு விளங்கும். திருக்குறள் வடமொழி மதம் பற்றிச் செய்யப்பட்ட தென்பது அரியாதார் கூற்றென்க. வடமொழி மதம் பற்றிச் செய் திருப்பின், வள்ளுவர் குறளை அறம், பொருள், இன்பம், வீடு என நாற்பாலாகச் செய்திருப்பார்.

வினா: பரிமேலழகர் திருக்குறள் வடமொழி, மதம்பற்றிச் செய்யப்பட் டிருக்கின்றதெனக் கூறியிருக்கின்றார். அது எப்படி?
விடை: பரிமேலழகர் காலத்தில் வடமொழி நூல்களைப் பின்பற்றியே தமிழ் நூல்கள் எல்லாம் செய்யப்பட்டன என்னும் தவறான கருத்துப் பரவியிருந்தது. அவர் பார்ப்பனர் ஆதலின் இந்நம் பிக்கை இன்னும் அதிகமாக இருந்தது. ஆகவே பரிமேலழகர் அவ்வாறு தான் கூறமுடியும். அவர் கூறிய அக்கருத்தினை ஏற்றுக்கொள்வார் இன்று எவருமில்லை.

வினா: திருவள்ளுவர் தனது நூலுக்கு ஆதாரங்களை மனு நூல், அர்த்த சாத்திரம், சாணக்கியம், காமந்தம், வாத்ஸ்யாயனம், பகவத்கீதை முதலிய நூல்களிலிருந்து எடுத்தார் எனச் சிலர் கூறுகின்றனர். அது உண்மையா?
விடை: உண்மைகள் எல்லாருக்கும் பொது. மேல் நாட்டுப் புலவர்களின் கருத்துக்கள் பல கீழ்நாட்டுப் புலவர்களின் கருத்துக்களோடு ஒத்திருக்கின்றன. இதனால் இரு நாட்டுப் புலவர்களும் ஒருவர் பாடலை ஒருவர் பார்த்துப் பாடினார்கள் எனக் கூறமுடியுமா? பகவத் கீதை, சாணக்கியர் நூல்கள் தமிழ்நாட்டுக் கருத்தை விளக்க வடமொழியிற் செய்யப்பட்ட நூல்கள். இக்கருத்துக்கள் திருவள்ளுவருக்குத் தமிழ்நாட்டிலேயே கிடைத்தவை. மனு நூல், திருக்குறளோடு மாறுபட்டது. மனு நூல் ஊனுண்ணுதல், ஒரு குலத்துக்கு ஒரு நீதி விதித்தல் போன்ற கோணல்கள் உடையது. திருக்குறள் ஊனுண்ணுதலைக் கண்டிப்பது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பது “வள்ளுவர் செய் திருக்குறளை வழுவற நன்குணர்ந் தோர். உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி” என, இவ் விரு நூல்களின் மாறுபாட்டை மனோன்மணிய ஆசிரியர் நன்கு எடுத்து விளக்கியுள்ளார்.

வினா: சிலப்பதிகாரம் கி.பி. 6ஆம் நூற்றாண்டிலும் மணிமேகலை கி.பி. ஏழாம் நூற்றாண்டிலும் செய்யப்பட்டன என்று பி.தி. சீனிவாச ஐயங்கார் “தமிழரின் வரலாறு” என்னும் நூலில் கூறியுள்ளார், அவர் கருத்து நேராயிருக்குமா?
விடை: அவர் கூறுவதற்குத் தக்க காரணமே கிடையாது. மணிமேகலையில் வடமொழிப் பெயர்கள் காணப்படுவதால், அது பிந்திய நூல் எனக் கூறமுடியாது. ஐரோப்பியர் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வந்த காலம் முதல் இந்தியாவிலும் இலங்கையிலும் மக்கட் பெயர்கள் இடப்பெயர்கள் பல மேல்நாட்டுப் பெயர்களாகவுள்ளன. மக்கள் சமயம் மாறும்போதே அவர்கள் சமய மொழியும் அம்மொழிப் பெயர்களும் அவர்களிடையே வழங்கத் தொடங்கிவிடும். புத்த மதம் அசோகன் காலம் முதல் தென்னாட்டிலும் இலங்கையிலும் பரவத் தொடங்கிற்று. பி.தி. சீனிவாச ஐயங்கார் ஆரிய மதம் (Aryan Cult) எனக் கொண்ட கருத்தே தவறுடைத்து, “நெருப்பு மதம்” (Fire Cult) நெருப்பில்லாத மதம் (Fireless Cult) என்பவை போன்ற கருத்துக்களை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. சிலப்பதிகார காலம், மணிமேகலை காலங்களைக் கீழே இழுக்கப் பார்ப்பது தலைச் சுழற்சினாலேயேயன்றி நேர்மையான காரணங்களாலன்று என அறிக. அக்காலத்திலேயே சைவ புத்த மதங்கள் தென் னாட்டுக்கு வந்துவிட்டன.

வினா: சிலப்பதிகாரத்தின் பிற்பகுதி பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்ட தென ஒரு சிலர் கூறுகின்றனர்; அது உண்மையாகுமா?
விடை: அது ஒருபோதும் உண்மையாகமாட்டாது. தமிழ் அரசர்கள் கங்கைக்கரை வரையில் சென்று போர் செய்யமாட்டார்கள் என்று அவர்கள் நினைப்பதே அவர்கள் அவ்வாறு கூறவதற்குக் காரண மாகும். செங்குட்டுவன் வடநாடு சென்று போர் புரிந்த வரலாறு, மிக ஏற்றதென்பதை K.G. சேஷ ஐயரவர்கள் நன்கு விளக்கியுள்ளார். அதனை எமது தமிழ் ஆராய்ச்சி என்னும் நூலில் சிலப்பதிகார காலம் என்னும் தலைப்பின் கீழ் காண்க.

வினா: ஆரியர் எனப்பட்ட பிராமணர் ‘மெய்யர்’ எனக் கூறப்பட் டார்கள் என்றும், அதனால் தமிழர் பொய்யையே பெரிதும் பேசுபவர்களா யிருந்தார்கள் என்றும் சிலர் கூறுகின்றனர். 1அது உண்மையாகுமா?
விடை: தமிழர் ஆரியரை மிலேச்சர் (Barbarians) என்றே அழைத்து வந் தார்கள். இதனை நாம் திவாகரம், பிங்கலந்தை, சூடாமணி நிகண்டு களிற் காணலாம். முற்காலத்தில் இந்தியக் கிறித்தவர்கள் தம்மை ஞானிகள் என்றும், மற்றவர்களை அஞ்ஞானிகள் என்றும் கூறி னார்கள். இவ்வாறே பிராமணர் தம்மை மெய்யர் என்றும், மற்றவர் களை பொய்யர் என்றும் இழித்து உரைத்து வந்தார்கள் என்பதற்கு இது ஏற்ற உதாரணமாகும்.

வினா: பாண்டியர் பாண்டுவினின்றும் தோன்றியவர்கள் எனச் சிலர் கூறுகின்றனர். பாண்டியர் பாண்டுவிலிருந்து வந்தார்களா?
விடை: பாண்டுவுக்கு முன்னரே பாண்டியர் உளர். ஆகவே பாண்டுவிலி ருந்து பாண்டியர் தோன்றினார்கள் என்பது நகைப்புக்கிடமானது. சேர, சோழ, பாண்டிய இராச்சியங்களில் பாண்டிய இராச்சியம் பழமையுடையது. ஆகவே பழைய தமிழ்நாட்டு அரசர் பாண்டியர் எனப்பட்டனர். பாண்டியர் என்பதின் அடி, பண்டு.

வினா: ஆரியச்சார்பில்லாத தமிழ் நூல்கள் இல்லை என “2ஒரு சாரார் கூறுகின்றனர்? அது உண்மையா?
விடை: சங்க நூல்கள் ஆரியச்சார்புடையனவென்று கூற முடியாது. சங்க நூல்களில் காணப்படும் கருத்துக்கள் தமிழ்நாட்டுக் குரியனவே. அந்நூல்களில் காணப்படும் வடசொற்கள் நூற்றுக்கு ஒன்று அல்லது இரண்டு என்று பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர் களால் கணக்கிடப்பட்டுள்ளது. 3அவர் வடசொற்கள் என்று கருதியவை பல தமிழ்சொற்கள் எனத் தெரிகின்றன.

வினா: தமிழரிடையே ஒழுக்கக்கேடு அதிகம் இருந்தமையினாலேயே, தமிழில் நீதி நூல்கள் பல எழுதப்பட்டன என்று சிலர் கூறு கின்றனர். 4அதில் உண்மை இருக்கிறதா?
விடை: ஆரிய மொழியில் “ஸ்மிருதிகள்” எனப்படும் நீதி நூல்கள் காணப் படுவதினால், ஆரியர் நீதிகெட்டவர்களாயிருந்தார்கள் என்று பொருள்படுமா? ஆரியருக்குச் சாணக்கியர், போதாயனர், அபத் தம்பர் முதலிய திராவிடர் நீதி நூல் செய்து அளித்தமையால், திராவிடரே நீதியைப் பற்றி யறியாதிருந்த ஆரியருக்கு நீதியைக் கற்பித்தார்கள் என்று கூறினால் ஆரியர் ஏற்றுக்கொள்வார்களா? தமிழ் அறிஞர், தமிழ்நாட்டில் ஒழுக்கங்கள் எனக்கொள்ளப் பட்ட கருத்துக்களைத் திரட்டி மாணவர் இளமையிற் பயிலும் முறையில் நீதி நூல்களாகச் செய்தனர். தமிழில் நீதி நூல்கள் இருப்பதால் தமிழர் நீதியறியாதிருந்தார்கள் எனக் கூறுதல் மதியில் கூற்றேயாகும்.

வினா: சைவசித்தாந்தக் கருத்துக்கள் தமிழருடையனவல்ல என ஒருசாரார் வாதிக்கின்றனர்1 அதின் உண்மை எவ்வாறு?
விடை: சைவ சித்தாந்தக் கருத்துக்கள் தமிழருடையனவென டாக்டர் போப் போன்ற மேல்நாட்டறிஞர் நன்கு ஆராய்ந்து நாட்டி யுள்ளார்கள். இருக்குவேத கால ஆரியர் மறுபிறப்பைப் பற்றி அறியார்கள் என்றும், சைவசித்தாந்த ஞானத்தைக் கூறும் உப நிடதங்கள் ஆரியருடையனவல்ல என்றும் விண்டர்நிட்ஸ் (Winternitz) போன்ற அறிஞர் நன்கு ஆராயந்து கூறியுள்ளார்கள்.

வினா: ஆரியர் வருகைக்குமுன் சோதிடம், இசை, வான ஆராய்ச்சி போன்றவை தமிழரால் நன்கு வளர்க்கப்பட்டன வென்று கனக சபைப் பிள்ளை அவர்கள், 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் என்னும் நூலிற் கூறியது தவறு என ஒருவர் கூறுகின்றார்1. அவர் கூறுவதில் உண்மை உண்டா?
விடை: இது சந்திரசூரியரின் உண்மையைப் பிறவிக்குருடன் மறுத்தது போலாகும். அரப்பா மொகஞ்சதரோப் புதை பொருளாராய்ச் சிக்கு பின், ஆரியர் வருவதற்கு 2000 ஆண்டுகளின் முன்னரேயே தமிழர் வான ஆராய்ச்சி, இசை, மொழி, எழுத்துப்போன்றவை களை நன்கு அறிந்திருந்தமை வெளியாகின்றது.

வினா: தமிழர் வரலாறு எழுதுவோர், தமிழரின் உயர்புக்கு மாறான கருத்துக்களை ஏன் எழுதி வருகின்றார்கள்?
விடை: பிராமணரல்லாதார் எழுதும் தமிழர் வரலாறுகளில் இவ்வாறு தமிழரை இழிவுபடுத்தும் கருத்துக்கள் காணப்படுவதில்லை. பிராமணர் என்னும் வகுப்பினர் எழுதும் நூல்களிலேயே இவ் வகைக் கருத்துக்கள் காணப்படுகின்றன. அவர்கள் தாம் தமிழ ரல்லர் என்றும், தமது கூட்டத்தினரே தமிழரை நாகரிகப்படுத்தினா ரென்றும் நம்புகின் றார்கள். தமிழரால் அவர் உயர் வெய்தினர் என்று எவரேனும் கூறினால், அதனை அவர்கள் பொறுக்கமாட் டார்கள். சமயம், சாதி, மொழி என்னும் மூன்று கருத்துக்கள் வரும்போது அவர்களின் புத்தி அவர்களை அறியாமலே மாறு பட்டு விடுகின்றது. பழக்கிவளர்க்கப்படும் புலி இரத்தத்தைக் கண்டால் மூர்க்கங்கொண்டுவிடும். பின்பு அதனை அடக்க முடியாது. அதுபோலவே பிராமண சரித்திர ஆசிரியர்கள் இயல்புமாகும். ஆகவே உண்மையான வரலாறுகளைப் படிக்க வேண்டுமானால் நாம் மேல்நாட்டாசிரியர்கள் எழுதியவை களைப் பயிலவேண்டும்.

வினா: நடுவுநிலைமையோடு தமிழரைப் பற்றிய வரலாறு எழுதிய பிராமண வகுப்பினர் ஒருவரேனும் இல்லையா?
விடை: எல்லாவற்றுக்கும் புறநடை உண்டு. தமிழ் மொழி வரலாறு எழுதிய சூரிய நாராயண சாத்திரியார் தனது பெயரையே பரிதிமாற் கலைஞன் என மாற்றிக்கொண்டார். அவர் நடுவு நிலைமையோடு அவர் காலத்தில் தமிழரைப் பற்றி அறியப்பட்டிருந்த கருத்துக் களை நன்கு எழுதியுள்ளார். திராவிட இந்தியா என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதிய சேஷ ஐயங்காரவர்களும் நடுவு நிலை மையைப் பயன்படுத்தியுள்ளார். ஏனையவர்கள் நூல்களில் இவர்களை ஒத்த நேரான கருத்துக்களைப் பெரிதுங் காண்டலரிது.

வினா: ஐயர் என்னும் சொல் ஆரியர் என்பதன் திரிபா?
விடை: ஐயன் என்பது கடவுளுக்குப் பெயராகத் தமிழரால் வழங்கப்பட் டது. ஆகவே கடவுட் பூசை, செய்வோர் ஐயர் எனப்பட்டனர். தொல்காப்பியத்தில் “ஐயர் யாத்தனர் கரணம்” என்பதிலுள்ள ஐயர் கோயிற் பூசகராகிய பார்ப்பனரைக் குறிக்கும்.

வினா: இந்தி, பொது மொழியாயிருப்பதினும் பார்க்க ஆங்கிலம் பொது மொழியாதல் நன்று எனச்சிலர் கூறுகின்றனர். அது ஏன்?
விடை: இந்தியில் அறிவு நூல்களும் சிறந்த இலக்கியங்களுமில்லை. ஆங்கில மொழியில் உலக இலக்கியங்களும் அறிவு நூல்களும் உள்ளன. ஆங்கில மொழியைக் கற்பதால் அம்மொழியிலுள்ள அறிவு நூல்களைப் பயின்று அறிவைப் பெருக்கலாம். இந்தியைக் கற்பதால் இவ்வாய்ப்பு உண்டாகமாட்டாது.

1.  தென்னிந்தியாவில் ஆரியர் திராவிட மொழிக்குப் பதில் தமது மொழியை நாட்டமுடியாதிருந்தது மிகவும் வியக்கத் தக்கதே; ஆனால் வட இந்தியாவில் அவர்களின் முயற்சி முழுவதும் பலித்தது.
    ஆரியர் வருகைக்கு முன் வட இந்தியா முழுமையிலும் திராவிடமொழி வழங்கிற்று என்பதில் சிறிதும் ஐயப்பாடு வேண்டியதில்லை - இந்தியப் பழஞ் சரித்திர விரிவுரைகள் - பந்தார்க்கர் (Lectures on the ancient history of India - M.D. Bhandarkar M.A.)
    இருக்கு வேதமொழி திராவிடச் சொற்களை இரவல் பெற்றது ஏன்? அம்மொழியின் உச்சரிப்பு முறைகள் மாறுபட்டது ஏன்? என்னும் ஆராய்ச்சிகளும் வடக்கே திராவிடம் இருந்ததென்பதை விளக்கும் - பழைய இந்திய நாகரிகத்தின் சில தன்மைகள் டி.ஆர்.பந்தார்க்கர் - Short Studies in the Science of Comparative religions. P 247 J.G.R. Eorlong.

“கன்னடமும் களி தெலுங்கும்
கவின் மலையாள முந்துளுவும்
உன் உதரத் துதித்தெழுந்தே
ஒன்று பல வாயிடினும்” (மனோன்மணியம்)